வைரஸ் என்பது நுண்ணிய, உயிரற்ற உயிரினம். பாக்டீரியா, தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின்மீது வைரஸ் தொற்றிக் கொள்ளும். அப்படித் தொற்றிக் கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களை இவை உருவாக்குகின்றன. வாழும் உயிரினங்களின் மரணத்துக்குக் கூட இந்தத் தொற்று பல சமயங்களில் வழிவகுக்கும். மனித உடம்பில் இருப்பதைப் போன்ற செல்கள் வைரஸ்களுக்கு கிடையாது. எனவே, தங்கள் வளர்ச்சி மற்றும் உருவாக்கத்துக்காக வாழும் உயிரினம் ஒன்றை அவை தொற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும்: வைரஸ் பற்றிய தகவலைக் கொண்டிருக்கும் வேதி அமைப்பு, அதைப் பாதுகாக்கும் மேல் ஓடு, வெளிப்புற உறை. வாழும் உயிரினங்களில் இருந்து வைரஸ்கள் வேறுபட்டிருந்தாலும், மரபணு தகவல் குறித்த வேதி அமைப்புகளைக் (வாழும் உயிரினங்களில் டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ; வைரஸ்களில் ஆர்.என்.ஏ.) கொண்டிருப்பதுதான் இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரே ஒற்றுமை. வைரஸ்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான முதல் வேலையாக, வாழும் உயிரினம் ஒன்றின் செல்லுக்குள் புகுந்து அதன் செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரும். பிறகு அந்தச் செல்லுக்குள்ளேயே தன்னுடைய நகல்களைப் பெருக்கிக் கொள்ளும். ஒரு கட்டத்தில் அந்தச் செல் வெடித்து, வைரஸ் துகள்களை மற்ற செல்களுக்கும் பரப்பும். சில சமயங்களில் நகல்களைப் பெருக்கும் நிகழ்வின்போது, வேதி அமைப்புகளைக் கொண்டிருக்கும் தகவல்கள், மரபணு திடீர் மாற்றம் (mutation) என்ற நிகழ்வினால் மாற்றத்துக்கு உள்ளாகும். இது நோய்க்கான சிகிச்சையைக் கடினமாக்கும். சார்ஸ் (SARS), இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் என்கோவிட்-19 (nCovid-19) போன்றவை மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ்களில் சில. தற்போதைய என்கோவிட்-19 வைரஸ் கடந்த காலத்தில் விலங்குகளைத் தொற்றி, சீனாவின் உயிரி விலங்கு சந்தையில் இருந்த விலங்கு ஒன்றிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கிறது.
